Skip to main content

நாடாளுமன்ற ஊழியர்களின் புதிய சீருடையில் மாற்றம்; காங்கிரஸ் எதிர்ப்பு!

Published on 13/09/2023 | Edited on 13/09/2023


 

Congress Opposition for Controversy over new uniforms for parliamentary staff;

 

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. முதல் நாளான 18ஆம் தேதி பழைய நாடாளுமன்றத்திலும், அதை தொடர்ந்து அதற்கடுத்த நாட்களில் புதிய நாடாளுமன்றத்திலும் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 19ஆம் தேதி புதிய நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடர் நடைபெறுகிறது என்று கூறப்படுகிறது. அன்றைய தினம் சிறிய பூஜைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

 

இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு மாறும் பொழுது அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு புதிய சீருடை வழங்கப்பட இருக்கிறது. இந்த சீருடையை பாட்னா தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப மையம் தயாரித்துள்ளது. நாடாளுமன்ற செயலகத்தில் 5 பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஒவ்வொரு பிரிவினருக்கு ஒவ்வொரு விதமான சீருடை வழங்கப்பட இருக்கின்றன.  அதில் ஆண் ஊழியர்களுக்கு, ‘நேரு ஜாக்கெட்’ பாணியில் இளஞ்சிவப்பு நிற சட்டையும், காக்கி நிற பேண்டும் சீருடையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் சட்டையில் தாமரை பூக்கள் அச்சாகி இருக்கும் . 

 

அதே போல் நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் காவலர்களின் உடைகளும் மாற்றப்பட்டு இருக்கின்றன. அவர்கள் மணிப்பூர் தலைப்பாகை அணிந்திருப்பார்கள். அதே போல், பெண் ஊழியர்களுக்கும் சேலை சீருடையாக வழங்கப்பட இருக்கிறது.  ஊழியர்களுக்கு வழங்கப்படும் சீருடையில் தாமரை பூக்கள் அச்சிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாமரை நமது நாட்டின் தேசிய மலர் என்றாலும் கூட, அது பா.ஜ.க கட்சியின் சின்னம் என்று காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறுகையில், “ நாடாளுமன்றம் அனைத்து கட்சிகளுக்கும் அப்பாற்பட்டதாகும்.  ஆனால், அதை கட்சி சொத்தாக பா.ஜ.க மாற்றி வருகிறது. நாடாளுமன்றத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சீருடையில் தேசிய விலங்கு என்பதால் ‘புலி’ படத்தை ஏன் போடவில்லை?.அதே போல் தேசிய பறவை என்பதால்  ‘மயில்’ படத்தை ஏன் போடவில்லை? ஏனென்றால் அவையெல்லாம் பா.ஜ.க.வின் சின்னம் அல்ல. இப்படி மலிவாக நடந்துகொள்ளும் பா.ஜ.க.வினரின் செயலை சபாநாயகர் கவனிக்க வேண்டும்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“சர்வாதிகாரத்தை ஒழிக்க மக்கள் விரும்புகின்றனர்” - ராகுல் காந்தி எம்.பி.!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
"People want to end dictatorship" - Rahul Gandhi MP

தமிழகம், மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதும் உள்ள 7 மாநிலங்களில் காலியாக உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதனையடுத்து இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (13.07.2024) எண்ணப்பட்டன.  அதன்படி 13 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள டெஹ்ரா மற்றும் நலகர் ஆகிய இரு தொகுதிகளிலும், உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் மற்றும் மங்களூர் ஆகிய இரு தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

அதே போன்று தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதியிலும், பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் மேற்கு தொகுதியிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் மேற்கு வங்கத்தில் உள்ள ராய்கஞ்ச், ரணகாட் தக்ஷின், பாக்தா மற்றும் மாணிக்தலா ஆகிய நான்கு தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிவின் படி காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலா 4 தொகுதிகளையும், ஆம் ஆத்மி, திமுக சார்பில் தலா ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே சமயம் பீகாரில் உள்ள ரூபவுலி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங் வெற்றி பெற்றுள்ளார். இமாச்சல பிரதேசத்தின் ஹமீர்பூர் உள்பட இரு தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாஜக பின்னியிருந்த பயம், குழப்பம் என்ற வலை உடைந்துவிட்டது என்பதை 7 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன. விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், ஊழியர்கள் என ஒவ்வொரு வர்க்கமும் சர்வாதிகாரத்தை முற்றிலுமாக அழித்து நீதியின் ஆட்சியை நிலைநாட்ட விரும்புகிறது. பொதுமக்கள் தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காகவும், அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்காகவும் இந்தியா கூட்டணியுடன் முழுமையாகத் துணை நிற்கின்றனர். ஜெய் ஹிந்துஸ்தான், ஜெய் அரசியலமைப்பு” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

இடைத்தேர்தல் முடிவுகள்; இந்தியா கூட்டணி அபார வெற்றி!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
by election results India alliance is a huge success

தமிழகம், மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதும் உள்ள 7 மாநிலங்களில் காலியாக உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதனையடுத்து இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (13.07.2024) எண்ணப்பட்டன. இந்நிலையில் 13 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள டெஹ்ரா மற்றும் நலகர் ஆகிய இரு தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் மற்றும் மங்களூர் ஆகிய இரு தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதியிலும், பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் மேற்கு தொகுதியிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் மேற்கு வங்கத்தில் உள்ள ராய்கஞ்ச், ரணகாட் தக்ஷின், பாக்தா மற்றும் மாணிக்தலா ஆகிய நான்கு தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த இடைத்தேர்தல் முடிவின் படி காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலா 4 தொகுதிகளையும், ஆம் ஆத்மி, திமுக சார்பில் தலா ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே சமயம் பீகாரில் உள்ள ரூபவுலி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங் வெற்றி பெற்றுள்ளார். இமாச்சல பிரதேசத்தின் ஹமீர்பூர் உள்பட இரு தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது.