நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
அதே வேளையில், காங்கிரஸ் கட்சியில் இருந்த முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும், கட்சியிலிருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு, மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் அசோக் சவான் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். பா.ஜ.கவில் இணைந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு அவருக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டது. அதேபோல், தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏவாக பொறுப்பு வகித்து வந்த விஜயதாரணி, தனது பதவியை ராஜினாமா செய்து கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தார். இது பெரும் விவாதப் பொருளாக மாறி வந்தது.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ஒருவர் கட்சியிலிருந்து திடீரென்று விலகியுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் கீதா கோடா. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பாக சிங்பூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில், எம்.பி. கீதா கோடா காங்கிரஸ் கட்சியிலிருந்து திடீரென்று விலகி, பா.ஜ.கவில் இணைந்துள்ளார். மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட கூட்டணி குறித்த அதிருப்தியால் கட்சியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார். சுயேட்சை எம்.எல்.ஏவாக இருந்த கீதா கோடாவின் கணவர் மதுகோடா, கடந்த 2006 ஆம் ஆண்டு, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.