கடந்த 2014ஆம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், டெல்லி லீலா பேலஸ் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, விஷத்தின் காரணமாக சுனந்தா புஷ்கர் உயிரிழந்ததாக கூறியது.
இதனையடுத்து, சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கைக் கொலை வழக்காக மாற்றி டெல்லி காவல்துறை விசாரணை நடத்திவந்தது. இதன்தொடர்ச்சியாக இந்த வழக்கில் டெல்லி காவல்துறை 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.
இதன்பின்னர், சசிதரூர் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் அரசியல் தலைவர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கை மாற்ற டெல்லி நீதிமன்றம் பரிந்துரை செய்தது. அதன்படியே இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்துவந்தது.
இந்தநிலையில் இன்று (18.08.2021) சிறப்பு நீதிமன்றம், சசி தரூரை சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பளித்துள்ளது.