உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 300-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 11,000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் இம்ரான் கேட்வாலாவுக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், காலையில் அவர் முதல்வர் விஜய் ரூபாணியைச் சந்தித்து பேசியுள்ளார். மேலும் அம்மாநில உள்துறை அமைச்சரையும் சந்தித்துப் பேசியுள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலருக்கு அவர் கை கொடுத்ததாகவும் கூறப்படுகின்றது. அவர் நேற்று மாலையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருடன் பேசியதால் குஜராத் முதல்வர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், இனி அலுவலகம் சார்ந்த எந்தச் சந்திப்புக்களையும் அவர் மேற்கொள்ள மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தகவல்களையும் தொலைபேசி வாயிலாகவே அவர் தெரிவிப்பார் என்றும் கூறப்படுகின்றது.