/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mani_13.jpg)
ஹரியானா மாநிலத்தில் மனோகர் லால் கட்டார் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ள குருகிராம் அருகே உள்ள மேவாட் என்ற இடத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் கடந்த ஜூலை மாதம் 31 ஆம் தேதி ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர். அப்போது மேவாட் பகுதியில் ஊர்வலம் சென்றபோது மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. இதனால், வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரிடையே வன்முறை வெடித்து பின்னர் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் காவல்துறையினர் வாகனம் உட்பட பல வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. அந்த வன்முறை சம்பவத்தால் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த இரு காவலர்கள் உள்ளிட்ட 6 பேர் பலியானார்கள். மணிப்பூரைத் தொடர்ந்து ஹரியானா மாநிலத்திலும் வெடித்த கலவரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வன்முறை மாநிலம் முழுவதும் பரவியதால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதனிடையே, இந்த வன்முறை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். அண்மையில், காவல் கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பேரில், பசு காவலர் பிட்டு பஜ்ரங்கி மற்றும் அவரது கூட்டாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், பிட்டு பஜ்ரங்கி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதால் தான் மற்றொரு சமூகத்தினர் இந்த ஊர்வலத்தை மறித்துள்ளனர். மேலும், காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் பிட்டு பஜ்ரங்கியை கைது செய்தனர்.
இதனிடையே, இந்த வன்முறைக்கு பெரோஷ்பூர் ஜஹிர்கா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ மமன் கான் தான் முக்கிய காரணம் என்று குற்றம்சாட்டி அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி மமன் கானுக்கு காவல்துறையினர் இரண்டுமுறை சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். அதே வேளை, இந்த வன்முறை வழக்கில் தன் பெயர் தவறாக இணைக்கப்பட்டுள்ளதாகவும், வன்முறைக்கு தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மமன் கான் வழக்குத் தொடர்ந்தார். அதில் அவர், இந்த வழக்கு தொடர்பாக தன்னை காவல்துறையினர் கைது செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்த வன்முறையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ மமன் கானுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக காவல்துறையினர் நேற்று (14-09-23) அவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மமன் கான் இன்று உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். மேலும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வன்முறையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.மமன் கானுக்கு தொடர்பு உள்ளதாக கைது செய்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வன்முறை நடந்த அந்த மாவட்டத்தில் 144 தடை விதிக்கப்பட்டு மொபைல் இணையம் மற்றும் மொத்த எஸ்.எம்.எஸ் சேவைகளையும் நிறுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)