Skip to main content

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பாதயாத்திரை நடத்திய காங்கிரஸ்! 

Published on 09/08/2022 | Edited on 10/08/2022

 

Congress held a padayatra to condemn the central and state governments!

விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருள்களுக்கு ஜி.எஸ்.டி. வரி நிர்ணயம் மற்றும் வேலை வாய்ப்பின்மை உள்ளிட்டவைகளைக் கண்டுகொள்ளாமல் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்படும் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசைக் கண்டித்தும், புதுச்சேரியில் பா.ஜ.க.- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அறிவித்த பத்தாயிரம் பேருக்கு அரசு வேலை, மூடப்பட்ட பஞ்சாலைகளை திறப்பது, விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி போன்றவற்றை செயல்படுத்தாத மாநில அரசைக் கண்டித்தும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை நடைபெற்றது.

 

காங்கிரஸ் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலையில் இருந்து புறப்பட்டு, அண்ணா சாலை, மறைமலை அடிகள் சாலை, காமராஜர் சாலை, நேரு வீதி, காந்தி வீதி உள்ளிட்ட நகரத்தின் அனைத்து பகுதிகளிலும் பாதையாத்திரை சென்றனர்.

 

இதில் 200- க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு செயல்படாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர். மேலும் பாதயாத்திரையின் போது மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்பாடுகளை விளக்கி வீடு, வீடாக துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். நகரத்தின் முக்கிய பகுதிகளுக்கு சென்ற பாதயாத்திரை மீண்டும் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலையில் முன்பு முடிவடைந்தது.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, "மத்தியில் ஆளும் நரேந்திரமோடி ஆட்சியில் 20 கோடி பேருக்கு வேலை இல்லை. 23 கோடி மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, பால், தயிர் என ஜி.எஸ்.டி வரி போடப்பட்டுள்ளது.

 

இந்த ஆட்சி தேவையா என்ற கேள்வியை எழுப்பி மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கியும், புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து, மாநில கடன் தள்ளுபடி, 2,000 கோடி மானியம் என்ற அறிவிப்புகள் வெளியிட்டு செயல்படுத்தாத என்.ஆர்.காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், சூப்பர் முதல்வராக செயல்படும் தமிழிசை, ரங்கசாமியின் செயல்படாத இந்த புதுச்சேரி அரசைக் கண்டித்தும் பாதயாத்திரை நடைபெறுகிறது" என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.