
விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருள்களுக்கு ஜி.எஸ்.டி. வரி நிர்ணயம் மற்றும் வேலை வாய்ப்பின்மை உள்ளிட்டவைகளைக் கண்டுகொள்ளாமல் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்படும் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசைக் கண்டித்தும், புதுச்சேரியில் பா.ஜ.க.- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அறிவித்த பத்தாயிரம் பேருக்கு அரசு வேலை, மூடப்பட்ட பஞ்சாலைகளை திறப்பது, விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி போன்றவற்றை செயல்படுத்தாத மாநில அரசைக் கண்டித்தும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை நடைபெற்றது.
காங்கிரஸ் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலையில் இருந்து புறப்பட்டு, அண்ணா சாலை, மறைமலை அடிகள் சாலை, காமராஜர் சாலை, நேரு வீதி, காந்தி வீதி உள்ளிட்ட நகரத்தின் அனைத்து பகுதிகளிலும் பாதையாத்திரை சென்றனர்.
இதில் 200- க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு செயல்படாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர். மேலும் பாதயாத்திரையின் போது மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்பாடுகளை விளக்கி வீடு, வீடாக துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். நகரத்தின் முக்கிய பகுதிகளுக்கு சென்ற பாதயாத்திரை மீண்டும் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலையில் முன்பு முடிவடைந்தது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, "மத்தியில் ஆளும் நரேந்திரமோடி ஆட்சியில் 20 கோடி பேருக்கு வேலை இல்லை. 23 கோடி மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, பால், தயிர் என ஜி.எஸ்.டி வரி போடப்பட்டுள்ளது.
இந்த ஆட்சி தேவையா என்ற கேள்வியை எழுப்பி மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கியும், புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து, மாநில கடன் தள்ளுபடி, 2,000 கோடி மானியம் என்ற அறிவிப்புகள் வெளியிட்டு செயல்படுத்தாத என்.ஆர்.காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், சூப்பர் முதல்வராக செயல்படும் தமிழிசை, ரங்கசாமியின் செயல்படாத இந்த புதுச்சேரி அரசைக் கண்டித்தும் பாதயாத்திரை நடைபெறுகிறது" என்றார்.