இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர், பரபரப்பான சூழ்நிலையில் நேற்று (29.11.2021) தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதனால் மக்களவை நேற்று மட்டும் மூன்றுமுறை ஒத்திவைக்கப்பட்டது. மேலும், எதிர்க்கட்சி எம்.பிக்களின் அமளியால் மாநிலங்களவை ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து இன்று மக்களவை கூடியதும், 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கத்தைக் கண்டித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பில் ஈடுபட்டனர். அதன்பிறகும் அமளி தொடரவே, மக்களவை 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.