நாகை மாவட்டம் ஆற்காட்டுத்துறையில் இருந்து மீனவர்கள் வழக்கம் போல் விசைப்படகில் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். அதன்படி மீனவர்கள் கோடியக்கரைக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் 5 பேர் பைபர் படகுகளில் வந்துள்ளனர். அச்சமயத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த குமார், சாணக்கியன், அன்பழகன், பாக்கியராஜ், நாகராஜ் உள்ளிட்ட 5 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் மீனவர்களின் படகில் இருந்த மீன்கள், மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவி, செல்போன்கள் என பல்வேறு பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்த மீனவர் அன்பழகன் தற்போது வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மக்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் ஒன்றை அளித்துள்ளார். அதில், “வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை அருகே நேற்று நடந்த கொடூர சம்பவத்தைக் கண்டிக்கிறேன். இலங்கை கடல் கொள்ளையர்கள் தமிழக மீனவர்களைத் தாக்கி கொள்ளையடித்துள்ளனர். கடல் கொள்ளையர்களாலோ, இலங்கை கடற்படையினராலோ மீனவர்கள் மீது அடிக்கடி நடக்கும் இது போன்ற தாக்குதல்கள் குறித்து அரசு மிகத் துரிதமாகக் கவனித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கடல் பாதுகாப்பைப் பலப்படுத்தவும், மீனவர்களைப் பாதுகாக்கவும் அரசு உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.