ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸும், பா.ஜ.க.வும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.
அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதற்கு பா.ஜ.க சார்பில் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மீதும், ராகுல் காந்தி மீதும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பா.ஜ.க பிரதிநிதிகள் குழு தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளனர்.
அவர்கள் அளித்த அந்த புகார் மனுவில், ‘ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடியை ‘பனாட்டி’ (அபசகுனம்) என்ற அவதூறு வார்த்தையால் குறிப்பிட்டார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி தோற்றதற்கு பிரதமர் மோடிதான் காரணம் என்ற பொருளில் அவர் பேசினார். மேலும், மோடியை பிக்பாக்கெட்டுக்காரர் என்றும் பேசுகிறார். இதேபோல், குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது அம்மாநில இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தவறான தகவலை பரப்புகிறார்.
மோடியின் சாதி கடந்த 1999 ஆம் ஆண்டு இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. ஆனால், மோடி 2001 ஆம் ஆண்டு மாநில முதல்வர் ஆனார். எனவே, தொடர்ந்து அடிப்படையற்ற அவதூறு கருத்துக்களை தெரிவித்து வரும் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக தேர்தல் கமிஷன் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தல் சூழ்நிலையை சீர்குலைத்துவிடும். இழிவுபடுத்தி அவதூறு கருத்துக்களை பயன்படுத்துவதும், பொய்ச் செய்திகளை பரப்புவதும் தவிர்க்க முடியாததாகி விடும்’ என்று கூறப்பட்டுள்ளது.