Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

Advertisment

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து 60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

Advertisment

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர்.