காமன்வெல்த் விளையாட்டின் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் கனடா வீராங்கனை மிஷெல் லீயை 21- 15, 21- 13 ஆகிய நேர் செட்களில் வென்றார். காமன்வெல்த் போட்டியின் தனிப்பிரிவில் முதல்முறையாக தங்கப் பதக்கம் வென்று பி.வி.சிந்து அசத்தியுள்ளார்.
அதேபோல், காமன்வெல்த் பேட்மிண்டன் ஆடவர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் மலேசியாவின் சீ யாங்கை 19- 21, 21- 9, 21- 16என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் சிராக் ஷெட்டி, சாய்ராஜ் சாத்விக் இந்திய இணை, இங்கிலாந்தின் பென், ஷான் இணையை வீழ்த்தி தங்கம் வென்றது. காமன்வெல்த் பேட்மிண்டனில் ஒரே நாளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சரத் கமல், இங்கிலாந்தின் லியாம் பிட்ச்ஃபோர்டை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என 61 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.