/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a (10)_1.jpg)
உத்தரப்பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அம்மாநில பாஜகவில் ஏற்பட்டுள்ள பிளவால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. கரோனாவை கையாண்ட விதத்தில், அம்மாநில அரசும், மத்திய அரசும் மாறிமாறி குறை கூறியதோடு, இதனால், யோகி தரப்பினர், மோடி தரப்பினர் என இருவருமே அதிருப்தியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், மோடி ஆதரவைப் பெற்ற அரவிந்த் குமார் சர்மா என்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அம்மாநில பாஜகவிற்குள் நுழைந்தார். கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே மாநில சட்ட மேலவையில் உறுப்பினரானார்.
பிரதமர் மோடியின் நம்பிக்கைக்குரிய நபராகக் கருதப்படும் அரவிந்த் குமார் சர்மாவை, மோடி மற்றும் அமித்ஷாவே உத்தரப்பிரதேச அரசியலுக்குள் நுழைத்ததாகவும், யோகி ஆதித்யநாத்தின் கட்டுக்கடங்கா அதிகாரங்களைக் குறைக்கவே உத்தரப்பிரதேச அரசியலுக்குள் அவர் நுழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், யோகி ஆதித்யநாத், அரவிந்த் குமார் சர்மாவை தனது அமைச்சரவையில் சேர்க்க மறுத்துவிட்டதாகவும், இதனால் மோடியும் அமித்ஷாவும் யோகி ஆதித்யநாத் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த சூழலில் யோகி ஆதித்யநாத் டெல்லி சென்று பிரதமர் மோடி உள்ளிட்டோரைச் சந்தித்தார். இதன்பிறகு தற்போது அரவிந்த் குமார் சர்மா உத்தரப்பிரதேச மாநில பாஜகவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உத்தரப்பிரதேச பாஜக அமைச்சரும், மூத்த தலைவருமான சுவாமி பிரசாத் மவுரியா, சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு உத்தரப்பிரதேசத்தின் அடுத்த முதல்வரை பாஜக இறுதி செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.
இதனால் வரும் தேர்தலில் யோகி ஆதித்யநாத் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படமாட்டார் எனப் பேச்சுக்கள் எழுந்துள்ளன. மேலும் தேர்தலில் பாஜக வென்றால் அரவிந்த் குமார் சர்மா முதல்வராக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)