குடியுரிமை திருத்த சட்டம் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மசோதாவை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசு மற்றும் உள்துறை அமைச்சரை கண்டித்து நாடு முழுவதும் எதிர் கட்சியினர் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி காமராஜர் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், தமிழர் வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது திடீரென தாங்கள் கொண்டு வந்த சட்டத் திருத்த மசோதா நகலை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் உருவபொம்மையை எரிக்க முயன்ற போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.