
கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வெள்ளப்பாடு அருகே கத்தோலிக்க தேவாலயத்திற்குச் சொந்தமான 1.8 ஏக்கர் நிலம் ஒன்று உள்ளது. இந்த நிலம், ஸ்ரீ வனதுர்கா பகவதி கோயிலில் இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ளது.
இந்த நிலையில், கடந்த 5ஆம் தேதி மரவள்ளிக்கிழங்கு சாகுபடிக்காக அந்த 1.8 ஏக்கர் நிலத்தை மண் அள்ளும் இயந்திரங்கள் வெட்டிக் கொண்டிருந்தது. அப்போது, சிவலிங்கம் உள்பட ஒரு கோவிலின் பாகங்கள் கிடந்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள், தோண்டி வெளியே எடுத்தனர். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தில் இந்து கோயில் இருந்ததாக கிராம மக்களும், கோயில் அதிகாரிகளும் தெரிவித்தனர். பக்தர்கள் பிரார்த்தனை செய்யும் இந்த இடம், காலப்போக்கில் கைவிடப்பட்டு இறுதியில் காணாமல் போனதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து கோயில்கள் அதிகாரிகளும், தேவாலய நிர்வாகிகளும் இது தொடர்பாக பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அந்த பேச்சுவார்த்தை முடிவில், இந்து பக்தர்கள் அந்த இடத்தில் பிரார்த்தனை செய்யலாம் என்று தேவாலய நிர்வாகம் அனுமதித்துள்ளது.