இந்தியத் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, கடந்த ஒன்பதாம் தேதி அருணாச்சல பிரதேசத்திற்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில் வெங்கையா நாயுடு, அம்மாநிலத்திற்குச் சென்றதிற்குச் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வெங்கையா நாயுடுவின் பயணம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு எழுப்பிய கேள்விக்குச் சீனாவின் வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர், "எல்லைப் பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு சீரானது மற்றும் தெளிவானது. இந்திய அரசு ஒரு தலைபட்சமாகவும் சட்டவிரோதமாகவும் நிறுவியுள்ள அருணாச்சலப் பிரதேசம் என அழைக்கப்படும் பகுதியைச் சீன அரசு ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. சம்பந்தப்பட்ட பகுதிக்கு இந்தியத் தலைவர்கள் வருவதைச் சீன அரசு உறுதியாக எதிர்க்கிறது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், "சீனாவின் முக்கிய கவலைகளைத் தீவிரமாக மதிக்க வேண்டும் என்றும், எல்லைப் பிரச்சனையைச் சிக்கலாக்கும் மற்றும் பெரிதுபடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கவேண்டும் என்றும், இருதரப்பு நம்பிக்கை மற்றும் இருதரப்பு உறவுகளை குறை மதிப்பிற்கு உட்படுத்த வேண்டாம் என்றும் இந்தியத் தரப்பை நாங்கள் வலியுறுத்துகிறோம். அதற்குப் பதிலாக இந்தியா, சீன-இந்திய எல்லைப் பகுதிகளில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்ட உண்மையான உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இருதரப்பு உறவுகளை மீண்டும் வலுவான மற்றும் நிலையான வளர்ச்சிப் பாதையில் கொண்டுவர உதவ வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இந்தநிலையில் இந்தியா, சீனாவின் இந்த கருத்துக்களை நிராகரிப்பதாகக் கூறியுள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், "இதுபோன்ற கருத்துகளை நாங்கள் நிராகரிக்கிறோம். அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும். இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திற்கும் செல்வது போல் அந்த மாநிலத்திற்கும் இந்தியத் தலைவர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்தியத் தலைவர்கள் இந்திய மாநிலத்திற்கு வருவதை ஆட்சேபனை செய்வதற்கு எந்த காரணமும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
சீனா, அருணாச்சல பிரதேசத்தை தனக்குச் சொந்தமான பகுதி எனக் கூறி வருவதும், அங்கு இந்தியத் தலைவர்கள் பயணம் மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.