இந்தியாவின் அங்கமான அருணாச்சல பிரதேசத்தை சீனா, தொடர்ந்து தங்களுடைய பகுதி என சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும் சீனா தனது வரைபடங்களில் அருணாச்சல பிரதேசத்தை "ஜாங்னான்" அல்லது "தென் திபெத் என குறிப்பிட்டு வருகிறது. மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஆறு பகுதிகளுக்கு அதிகாரப்பூர்வ பெயர்களை சூட்டியது.
இந்தநிலையில் தற்போது சீனாவின் சிவில் விவகார அமைச்சகம், அருணாச்சல பிரதேசத்தின் 15 பகுதிகளுக்கு நிலையான பெயர்களை வெளியிட்டுள்ளது. சீன வரைபடங்களில் பயன்படுத்தப்படுவதற்காக இந்த பெயர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்தநிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா பெயர்களை சூட்டுவதன் மூலம் உண்மையை மாற்ற முடியாது என தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், "அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயரை மாற்ற சீனா முயல்வது இது முதல் முறை அல்ல. ஏப்ரல் 2017லிலும் சீனா இதுபோன்று பெயர்களை சூட்ட முயன்றது. அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒன்றிணைந்த பகுதியாக இருந்து வருகிறது. தொடர்ந்து இந்தியாவின் ஒன்றிணைந்த பகுதியாக இருக்கும். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு பெயர் சூட்டுவது இந்த உண்மையை மாற்றாது" என தெரிவித்துள்ளது.