கேரளாவில் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட இருக்கிறது. இதில் கேரளா அரசு ஏற்பாடு செய்திருக்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இதற்காக கேரள மாநிலம் வைக்கம் பகுதிக்கு சென்ற முதல்வருக்கு கேரள அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் வைக்கம் போராட்ட வீரர்கள் சிலைகள் உள்ள நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
வைக்கம் பகுதியில் நான்கு ரத வீதிகளில் அன்றைய காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தடையை எதிர்த்து 1924 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி இந்த போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து நடந்த போராட்டத்தில் காலப்போக்கில் தொய்வு ஏற்பட்டதன் அடிப்படையில் தந்தை பெரியார் வைக்கம் பகுதிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் வைக்கம் போராட்டம் எழுச்சி பெற்றது. இதற்காக தந்தை பெரியாருக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட பின்னும் மீண்டும் பெரியார் போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர் போராட்டத்தின் பலனாக அந்த மக்களின் உரிமை காக்கப்பட்டது.
இதனை வைக்கம் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாட தமிழக அரசு முடிவெடுத்துள்ள நிலையில் தமிழக முதல்வர் கேரளா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கேரளாவின் வள்ளிகாவலாவில் சத்தியாகிரகத் தலைவர்கள் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.