கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 10 கிலோ அரிசி இலவசம், 18 முதல் 25 வயது வரை உள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500, அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்று அறிவித்திருந்தது.
இதையடுத்து நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவகுமார் துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர். முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு பதவியேற்ற உடனே பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், இளைஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை நிறைவேற்றி அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று நடைபெற்ற கர்நாடக மாநில அமைச்சரவை கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட இத்திட்டங்கள் அனைத்தும் நிபந்தனைகள் இன்றி அனைவரையும் சென்றடையும் வகையில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும் இது குறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில், "தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் சாதி மத பேதமின்றி அனைவருக்கும் சென்றடையும். குடும்பத்தலைவிகள் மாதம் 2000 ரூபாய் நிதியுதவி பெற ஆதார் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான விண்ணப்பங்கள் வரும் ஜூன் 15 முதல் ஜூலை 15 வரை பெறப்படும். ஆகஸ்ட் 15 முதல் குடும்பத்தலைவிகளின் வங்கி கணக்கில் 2 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும்.
வரும் ஜூலை 1 முதல் அந்தியோதயா ரேஷன் அட்டைதாரர்கள் 10 கிலோ இலவச அரிசி பெறலாம். மகளிர் இலவச பயணம் ஜூன் 11 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும். இத்திட்டத்தின் படி மகளிர் ஏசி மற்றும் ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட பேருந்துகளை தவிர மற்ற சாதாரண பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம்" எனத் தெரிவித்தார். அமைச்சரவைக் கூட்டம் குறித்து கர்நாடக மாநில துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் கூறுகையில், "கர்நாடகாவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்துள்ளோம்" என தெரிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பானது கர்நாடக மாநில மக்கள் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.