Skip to main content

நான்கு நாள் டெல்லி பயணம் செல்கிறார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி! 

Published on 04/08/2022 | Edited on 04/08/2022

 

Chief Minister Mamata Banerjee is going to Delhi on a four-day visit!

 

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நான்கு நாள் பயணமாக டெல்லி செல்கிறார். ஆகஸ்ட் 7- ஆம் தேதி அன்று டெல்லியில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். தனது பயணத்தின் போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திக்கவுள்ளார். 

 

அதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசவிருக்கிறார். மேற்கு வங்கம் மாநிலம் தொடர்பான விவகாரங்கள் குறித்து, பிரதமரையும் அவர் சந்திக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

மேற்கு வங்கத்தில் காசு வேலை ஊழல் புகாரில் முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தொடர்புடைய இடங்களில் ஏராளமான பணம் பிடிபட்டு வரும் சூழலில், அவரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘அக்பர் - சீதா’ சர்ச்சை; சிங்கங்களுக்கு சூட்டப்பட்ட புதிய பெயர்கள்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
New names given to lions on 'Akbar - Sita' Controversy

மேற்கு வங்க மாநிலத்தில் சிலிகுரி உயிரியல் பூங்கா ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பூங்காவிற்கு, கடந்த 12 ஆம் தேதி திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவிலிருந்து இரண்டு சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன. அதில் 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு ‘அக்பர்’ என்றும் 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு ‘சீதா’ என்றும் முன்னரே பெயரிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த இரண்டு சிங்கங்களையும் ஒரே கூண்டில் அடைக்க உயிரியல் பூங்கா நிர்வாகம் முடிவு செய்ததாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து, ‘சீதா’ மற்றும் ‘அக்பர்’ சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநில விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘முகலாய மன்னரின் பெயரான அக்பர் என்ற பெயரையும் ராமாயணத்தில் வரும் சீதாவின் பெயரையும் சிங்கங்களுக்கு வைத்து ஒரே இடத்தில் வைக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்து மத வழக்கங்களில் சீதா தெய்வமாக கொண்டாடப்படுகிறார். எனவே, அக்பர் உடன் சீதாவைத் தங்க வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல். இதனால் அந்தச் சிங்கங்களின் பெயர் மாற்றப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சௌகதா பட்டாச்சார்யா அமர்வில் கடந்த 22 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “சிங்கத்துக்கு அக்பர் என்று பெயர் வைப்பதை சீதா மட்டுமல்ல நானும் ஆதரிக்கவில்லை. இந்து, கிறிஸ்துவர், இஸ்லாமியர், மத போராளிகள், மரியாதைக்குரியவர்கள். எனவே இது போன்ற பெயர்களை இனி விலங்குகளுக்கு வைக்க வேண்டாம். எனவே, சர்ச்சைகளைத் தவிர்க்க இரண்டு சிங்கங்களுக்கும் வேறு பெயர்களை வைக்க வேண்டும்” என்று கூறி மாநில அரசிற்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, திரிபுரா உயிரியல் பூங்காவில் இருந்த சிங்கங்களுக்கு அக்பர், சீதா பெயர் வைக்கப்பட்டதற்காக, அம்மாநிலத்தின் தலைமை வனப் பாதுகாவலர் பிரபின் லால் அகர்வாலை திரிபுரா அரசு இடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டது.

இந்த நிலையில், அக்பர் - சீதா பெயரால் சர்ச்சையில் சிங்களுக்கு புதிய பெயரை வைக்க மேற்கு வங்க அரசு பரிந்துரை செய்துள்ளது. அதில், அக்பர் என்ற ஆண் சிங்கத்திற்கு ‘சூரஜ்’ என்ற பெயரும், சீதா என்ற பெண் சிங்கத்திற்கு ‘தயா’ என்றும் புதிய பெயர்களை மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திடம் மேற்கு வங்க அரசு பரிந்துரைத்துள்ளது.

Next Story

‘சுகர் வருவதற்காகவே ஸ்வீட் சாப்பிடுகிறார்” - கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Kejriwal accused by the enforcement department to eats sweets just to get sugar

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரனைக்கு வந்தது. அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதாடுகையில், “தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. வரும் 24 ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை இது குறித்து பதிலளிக்க வேண்டும். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதங்களை முன் வைக்கலாம்” என நீதிபதிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை அவர் அளித்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது, ‘தான் சர்க்கரை நோயால் அவதிப்படுகிறேன் என்றும், தனது ரத்த அளவுகளை மருத்துவரைக் கொண்டு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும்’ கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு இன்று (18-04-24) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோகப் ஹொசெயின், “சர்க்கரை நோய் அதிகம் உள்ளதாகக் கூறும் அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் மாம்பழம் சாப்பிடுவது, இனிப்புகள் சாப்பிடுவது, சர்க்கரையுடன் டீ சாப்பிடுவது உள்ளிட்டவைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார். இரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கங்களைக் காரணம் காட்டி மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் பெறுவதற்கான ஒரு களமாக இதைப் பயன்படுத்த கெஜ்ரிவால் விரும்புகிறார்” என்று வாதாடினார்.

இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் விவேக் ஜெயின், ‘அமலாக்கத்துறை வைக்கும் இந்தக் குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் இது போன்றத் தகவல் பரவ வேண்டும் என்பதற்காகவே இதைச் சுமத்துகிறது. மருத்துவர்கள் பரிந்துரையின் பேரிலேயே அவர் உணவுகளை எடுத்து வருகிறார்’ என்று கூறினார்.