டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று (26/02/2021) மாலை 04.30 மணிக்கு இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, "பதற்றமான வாக்குச் சாவடிகளில் 'வெப் கேமரா' மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படும். வாக்குப்பதிவு மையங்களில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருக்கும். வாக்குப்பதிவு மையங்களில் சானிடைசர் மற்றும் முகக்கவசம் போன்ற கரோனா தடுப்பு உபகரணங்கள் இருக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவதில் தேர்தல் ஆணையம் உறுதியாக இருக்கும். குற்றப்பின்னணிக் கொண்ட வேட்பாளர்கள் விவரங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டும். புதுச்சேரியில் தொகுதி ஒன்றுக்கு ரூபாய் 22 லட்சம் மட்டுமே வேட்பாளர்கள் செலவுசெய்ய வேண்டும். தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தொகுதி ஒன்றுக்கு ரூபாய் 30.80 லட்சம் மட்டுமே வேட்பாளர்கள் செலவுசெய்ய வேண்டும்.
கேரளா மாநிலத்தில் 140 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6- ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும். மலப்புரம் மக்களவைத் தேர்தலும் ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறும். மேற்குவங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும். மேற்குவங்கத்தில் 30 தொகுதிகளுக்கு மார்ச் 27- ஆம் தேதி முதற்கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. 30 தொகுதிகளுக்கு ஏப்ரல் 1- ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தலும், 31 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6- ஆம் தேதி மூன்றாம் கட்டத் தேர்தலும், 44 தொகுதிகளுக்கு ஏப்ரல் 10- ஆம் தேதி நான்காம் கட்டத் தேர்தலும், 45 தொகுதிகளுக்கு ஏப்ரல் 17- ஆம் தேதி ஐந்தாம் கட்டத்தேர்தலும், 43 தொகுதிகளுக்கு ஏப்ரல் 22- ஆம் தேதி ஆறாம் கட்டத் தேர்தலும், 36 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26- ஆம் தேதி ஏழாம் கட்டத் தேர்தலும், 35 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29- ஆம் தேதி எட்டாம் கட்ட மற்றும் இறுதிக் கட்டத்தேர்தல் நடைபெறும். தமிழகம், கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி, அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் மே 2- ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.