/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fsfsfsd.jpg)
ஒரு அரசியல் கட்சியின் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தைச் சந்திக்க விரும்பினால், அதில் என்ன தவறு? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவம் பூதாகரமாகி வரும் சூழலில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று நேரில் செல்வதாக அறிவித்தனர். அதன்படி, அவர்கள் தங்களது வாகனத்தில் ஹத்ராஸ் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது போலீஸார் அவர்களது வாகனத்தைத் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அவர்கள் யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலை வழியாக நடந்தே செல்வதாக முடிவெடுத்து தொண்டர்களுடன் நடைப்பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், நடந்து செல்லும் ராகுல் காந்தியை போலீஸார் தடுத்து நிறுத்த முற்பட்டதோடு, அவரை தாக்கியதும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடைப்பயணம் மேற்கொண்டிருந்த பிரியங்கா காந்தி மற்றும் ராகுல்காந்தியை உத்தரப்பிரதேச போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சூழலில், போலீஸார் ராகுல் காந்தியிடம் நடந்துகொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போலீஸாரின் செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
அந்த வகையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், "உ.பி. காவல்துறைக்குத் தனிச் சட்டம் உள்ளது. அவர்களுக்கு நமது நாட்டின் சட்டங்கள் எதுவும் பொருந்தாது போல. ஒரு அரசியல் கட்சியின் தலைவர்கள் ஒரு கொடூரமான குற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தைச் சந்திக்க விரும்பினால், அதில் என்ன தவறு? இரு தலைவர்களும் வன்முறையில் ஈடுபடவில்லை. ஆயுதங்கள் வைத்திருக்கவில்லை. அமைதியான போராட்டத்தை நடத்தினர். அமைதியாக எதிர்ப்பு தெரிவிப்பதை காவல்துறை ஏன் தடுக்க வேண்டும்? உ.பிகாவல்துறை ஏன் இரு தலைவர்களையும் கைது செய்து அழைத்துச் செல்ல வேண்டும்? தலைவர்கள் ஆஜர்படுத்தப்படும் நீதிமன்றம் அவர்களை உடனடியாக விடுவிக்கும் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)