உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா வைரசால் 204 நாடுகளில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53,000-ஐ கடந்துள்ளது. 2,12,018 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் தற்போது வேகமாகப் பரவிவரும் இந்த கரோனா வைரஸ் 2000க்கும் மேற்பட்டோரைப் பாதித்துள்ளது. இதில் 53 பேர் உயிரிழந்துள்ளனர், 190 பேர் குணமாகியுள்ளார்.இதனையடுத்து கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை மக்கள் முன் உரையாற்றிய பிரதமர் மோடி, வரும் ஐந்தாம் தேதி இரவு ஒன்பது மணிக்கு மக்கள் அனைவரையும் ஒன்பது நிமிடங்கள் லைட்களை அணைக்க சொல்லிவிட்டு விளக்கு ஏற்ற சொன்னார்.ஏற்கனவே கடந்த வாரம் மக்கள் அனைவரும் வீதிகளில் நின்று கைதட்டிய சூழலில்,பிரதமர் விளக்கேற்ற கூறியிருப்பது குறித்து ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், "அன்புள்ள பிரமதர் மோடி. நாங்கள் உங்கள் பேச்சைக் கேட்கிறோம்.வரும் 5-ம் தேதி வீட்டில் தீபம் ஏற்றுகிறோம்.ஆனால், அதற்குப் பதிலாக நீங்கள் எங்கள் பேச்சையும்,பொருளாதார வல்லுநர்கள், தொற்றுநோய் வல்லுநர்களின் நல்ல அறிவுரையையும் கவனமாகக் கேளுங்கள்.
கடந்த 25-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் புறக்கணிக்கப்பட்ட ஏழை மக்களுக்காகப் புதிய நிதித்தொகுப்பை அறிவிப்பீர்கள் என்று எதிர்பார்த்தோம். வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும், தொழில் செய்வோர் முதல் கூலித்தொழிலாளி வரை,பொருளாாரச் சரிவைத் தடுத்து நிறுத்தும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டு பொருளாதார வளர்ச்சி இயந்திரத்தை மீண்டும் இயக்கிவிடுவீர்கள் என எதிர்பார்த்தார்கள்.ஆனால், மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.