'ஆர்.சி. புக் இருக்கா' எனக் கேட்ட டிராஃபிக் கான்ஸ்டபிள் ஒருவர் கடத்தப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், கடத்தலில் ஈடுபட்ட 29 வயது இளைஞர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சட்டிஸ்கர் மாநிலம் சுராஜ்பூரில், ட்ராஃபிக் கான்ஸ்டபிளாக பணியாற்றிவருபவர் 39 வயதான விரேந்திர சிங். கடந்த ஞாயிற்றுக்கிழமை (17.10.2021) அன்று காலை 9.30 மணியளவில் தேடப்படும் குற்றவாளி ஒருவன், திருட்டு வாகனம் ஒன்றில் வருவதாகவும், அவனை உடனே தடுத்த நிறுத்த வேண்டும் என்றும் சுராஜ்பூர் டிராஃபிக் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, சுராஜ்பூர் நகரைச் சுற்றிலும் உள்ள வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ட்ராஃபிக் கான்ஸ்டபிள் விரேந்திர சிங்கும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான மாருதி ஸ்விஃப்ட் டிசைர் கார் ஒன்று நின்றிருந்ததைக் கண்ட அவர், அதன் அருகில் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது, அந்தக் கார் டிரைவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். இதனால், சந்தேகம் அதிகமான கான்ஸ்டபிள் விரேந்திர சிங், அந்த டிரைவரிடம், வண்டியின் ஆர்.சி. புக் எங்கே எனக் கேட்டார். அதற்கு அந்த டிரைவரோ டேஷ்போர்ட், சீட்டுக்கு அடியில் என கார் முழுதும் எங்கெங்கோ தேடிப் பார்க்கிறார். பிறகு, “சார்.. ஆர்.சி. புக் என்னோட ஃபோனுல இருக்குது. உள்ளே வந்து நீங்களே பாருங்க. காருக்குள்ள வந்து உக்காருங்க” எனக் கூறுகிறார். ஆர்.சி. புக்கதான் காட்டப் போகிறார் என நம்பி உள்ளே சென்ற கான்ஸ்டபிள் விரேந்திர சிங்குக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கான்ஸ்டபிள் உள்ளே சென்ற அடுத்த நொடியே அந்த மர்ம நபர் காரின் கதவைப் படாரென சாத்திவிட்டு புகையாகப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இதைச் சற்றும் எதிர்பாராத கான்ஸ்டபிள் விரேந்திர சிங், தன்னை இறக்கிவிடுமாறு எவ்வளவோ கெஞ்சிப் பார்த்துள்ளார். ஆனால், அந்த மர்ம நபர் அதையெல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. அதற்குள் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தைக் கார் கடந்து சென்றுவிட்டது. இதனால், பதற்றமடைந்த விரேந்திர சிங், கொஞ்சம் நிதானித்து, அம்மாநில அவசர உதவி எண்ணான 112க்கு அழைத்து நிலைமையை அவசர கதியில் விளக்கியுள்ளார். போலீசே போலீஸுக்கு ஃபோன் செய்து காப்பாற்றும்படி கூறுவதை எந்த சலனமும் இல்லாமல் பார்த்துள்ளார் அந்த மர்ம நபர். பிறகு, ஒரு நொடி கூட தாமதிக்காமல், அருகில் இருந்த அஜாய்பூர் போலீஸ் சோதனைச் சாவடி அருகே கார் வந்தபோது, காரின் கதவை திறந்து கான்ஸ்டபிளைக் கீழே தள்ளிவிட்டு, காரோடு தப்பிச் சென்றிருக்கிறார் அந்த மர்ம நபர்.
இதையடுத்து, கான்ஸ்டபிள் விரேந்திர சிங்கை மீட்ட சக போலீசார், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், அந்த மர்ம நபரை தீவிரமாக தேடியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலை இந்தக் கடத்தல் சம்பவம் நடைபெற்ற நிலையில், திங்கள்கிழமை மாலையில் அந்த மர்ம நபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், "கடத்தலில் ஈடுபட்ட அந்த நபர், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா நகருக்கு உட்பட்ட கோடி பச்செடா கிராமத்தைச் சேர்ந்த 29 வயதான சச்சின் ராவெல் என்பது தெரியவந்தது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட அந்தக் காரை, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு டெஸ்ட் ட்ரைவின்போது திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞன் கைது செய்யப்பட்டு, அவனிடம் இருந்த மாருதி ஸ்விஃப்ட் டிசைர் காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.