மருத்துவச் சேர்க்கையில் பொருளாதார ரீதியில் 10% இட ஒதுக்கீடு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.
மருத்துவச் சேர்க்கையில் 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி பெற வேண்டுமெனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு எதிராக மத்திய அரசு, டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த வழக்கு இன்று (24/09/2021) உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், "மருத்துவச் சேர்க்கையில் 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உச்சநீதிமன்ற அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 27% ஒதுக்கீட்டில் அவமதிப்பு வழக்குத் தொடுத்த நிலையில் 10% இட ஒதுக்கீட்டில் உத்தரவு பிறப்பித்தது எப்படி? இட ஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தனது விசாரணை வரம்பை மீறியுள்ளதாகவே பார்க்க முடிகிறது. உச்சநீதிமன்ற உத்தரவின் மூலம் மருத்துவச் சேர்க்கையில் 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தத் தேவையில்லை" என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.