நாடு முழுவதும் 17-வது மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமான இன்று 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆந்திராவில் பல வாக்குச்சாவடிகளில் வாக்கு இயந்திரங்கள் சரியாக வேலை செய்யவில்லை என புகார் எழுந்தது. குண்டூர் தொகுதி, பிரகாசம் மாவட்டம், குப்பம் பகுதி, கடப்பா, அனந்தபூர், மங்களகிரி உள்ளியிட்ட பல இடங்களில் வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் குழப்பம் நீடித்து வருகிறது. இது மட்டுமல்லாமல் கடப்பாவின் 126வது பூத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அடித்து நொறுக்கப்பட்டதால் அப்பகுதியில் பூத்திற்கு இப்போதைக்கு பூட்டுப் போடப்பட்டு, வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. அம்மாநிலம் முழுவதும் பல வாக்கு சாவடிகளில் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆந்திராவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுது காரணமாக தேர்தல் நிறுத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மீண்டும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையருக்கு ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.