புதுச்சேரி அமைச்சரவையில் பதவி வகித்து வந்த ஒரே பெண் அமைச்சரான சந்திர பிரியங்கா இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால், அந்த மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில், புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் ரங்கசாமி உட்பட நான்கு அமைச்சர்கள் பதவி வகித்து வருகின்றனர். காரைக்கால் நெடுங்காடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான சந்திர பிரியங்காவுக்கு போக்குவரத்துத் துறை, ஆதி திராவிடர் நலம், வீட்டு வசதி உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டு அமைச்சராகச் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், திடீரென அவர் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். மேலும், அந்தக் கடிதத்தில் அவர், “தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து பெண்கள் அரசியலுக்கு வந்தால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என பொதுவாக கூறுவார்கள். தலித், பெண் என இரு பெருமைகளோடு இருந்த எனக்கு அதுதான் மற்றவர்களின் உறுத்தல் என்பது தெரியாமல் போனது” எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால், தற்போது அவரது ராஜினாமா விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜினாமா கடித்ததில் கூறியிருப்பதாவது; “என்னைச் சுற்றி பின்னப்பட்டுள்ள வலையில் சிக்கியுள்ள நிலையில் நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து பெண்கள் அரசியலுக்கு வந்தால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என பொதுவாக கூறுவார்கள். ஆனால், கடின உழைப்பு, மன தைரியமும் இருந்தால் இதைப் பற்றி கவலைப்படாமல் களத்தில் நீந்தலாம் என்பதற்கான பல முன்னுதாரணங்கள் வரலாற்றில் உள்ளதைப் பார்த்து களமிறங்கி கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி மக்களுக்காக இரவு பகலென ஓடி ஓடி உழைத்து வருகிறேன். மக்கள் செல்வாக்கு மூலம் மன்றம் நுழைந்தாலும் சூழ்ச்சி அரசியலிலும், பணம் என்ற பெரிய பூதத்தின் முன்னும் போராடுவது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்து கொண்டேன்.
தலித், பெண் எனும் இரு பெருமைகளோடு இருந்த எனக்கு அதுதான் மற்றவர்களின் உறுத்தல் என்பது தெரியாமல் போனது. தொடர்ந்து ஜாதிய ரீதியிலும் பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவதாக உணர்ந்தேன். சொந்தப் பிரச்சனைகளை ஆணாதிக்க கும்பல் கையில் எடுத்து காய் நகர்த்துதல் நாகரீகமல்ல. ஆனால், தொடர்ந்து குறிவைக்கப்பட்டேன். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள இயலாதல்லவா. ஆதிக்க சக்திகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி அமைச்சராக நீடிக்க இயலாது என்பதை உணர்ந்து எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.