ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாசிங்டன் டி.சியில் பேசிய பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி ஜூன் 20 முதல் ஜூன் 23 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடி, பின் ஜூன் 24 மற்றும் ஜூன் 25 ஆகிய தேதிகளில் எகிப்து நாட்டிற்குச் செல்கிறார்.
இந்நிலையில் அமெரிக்க பயணத்தின் இறுதி நாளான நேற்று வாசிங்டன் டி.சியில் உள்ள ரொனால்ட் ரீகன் அரங்கில் புலம் பெயர்ந்த இந்திய மக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அமெரிக்கா, இந்தியா ஆகிய இரு பெரிய ஜனநாயக நாடுகளுக்கு இடையேயான நட்புறவு வலுவடைவதை உலகமே காண்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டுறவின் உண்மையான திறன் இனிமேல் தான் வெளிவரும்.
அகமதாபாத் மற்றும் பெங்களூருவில் இரண்டு புதிய தூதரகங்கள் திறக்கப்பட உள்ளன. அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு அறிக்கை நிறுவ இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும். இந்தாண்டு சியாட்டில்லில் இந்தியா புதிய தூதரகத்தை திறக்க இருக்கிறது. விரைவில் அமெரிக்காவில் மேலும் இரு தூதரகங்களை இந்தியா திறக்கும். இந்தியாவில் இருந்து திருடப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொல்பொருட்களை திருப்பி அளிக்க அமெரிக்க அரசு முடிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக அமெரிக்க அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.