இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நாட்டில் 70 சதவீதம்பேருக்குக் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுவிட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இந்தநிலையில் இந்தியா அண்மையில் 12 வயது மட்டும் அதற்கும் மேற்பட்டோருக்கான ஸைடஸ் காடிலா நிறுவனத்தின் ‘ஸைகோவி - டி தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியது.
இதனால் இந்தியாவில் விரைவில் 12 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடுத்த வார இறுதிக்குள் உருவாக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, சில நாட்களில் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோருக்குத் தடுப்பூசி செலுத்துவது குறித்து கரோனா தடுப்பூசி செலுத்துதல் தொடர்பான தேசிய நிபுணர் குழுவிற்கு பரிந்துரை செய்யவுள்ளதாகவும், அதனைத்தொடர்ந்து 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் எனவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே குழந்தைகள் மீது தனது கோவாக்சின் தடுப்பூசியை பரிசோதனை செய்து வரும் பாரத் பையோடெக் நிறுவனம், அக்டோபர் 20 அல்லது 21 ஆம் தேதியில், குழந்தைகளுக்கு தங்களது தடுப்பூசியைச் செலுத்த அவசரக்கால அனுமதி கோரி விண்ணப்பிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.