இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த இரண்டாவது அலையின்போது டெல்லியில் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் உள்ளிட்டவைகளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
இதனையடுத்து ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணங்களை ஆய்வு செய்து, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க டெல்லி அரசு 6 பேர் அடங்கிய குழு ஒன்றை அமைத்தது. டெல்லியில் அனைத்து அதிகாரங்களும் துணை நிலை ஆளுநருக்கே என்பதால், இந்த குழுவிற்கு அனுமதிகேட்டு குழு தொடர்பான கோப்பு துணை ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
இந்தநிலையில் டெல்லி அரசு அமைத்த குழுவிற்கு மத்திய அரசு, அனுமதி மறுத்துள்ளதாக டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர், "கமிட்டி அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலையீட்டின் பின்னர் இந்த குழு அமைக்கப்பட்டது. இதில்மத்திய அரசின் பிரச்சினை என்னவாக இருக்கும் என்று எனக்கு புரியவில்லை. அவர்கள் தேவையில்லாமல் தடைகளை உருவாக்க முயற்சிக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் அனைத்து மாநில அரசுகளின் அன்றாட செயல்பாட்டிலும் அவர்கள் தலையிடுகிறார்கள். இது தேவையற்றது. மாநிலங்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம் என்று நான் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.