நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், மத்திய அரசு இன்று (20.12.2021) தேர்தல் சட்டங்கள் (திருத்த) மசோதா, 2021-ஐ மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்யவுள்ள இந்த மசோதா, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க வழிவகை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள் இந்தமசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆதார் தகவல்கள் கசிய வாய்ப்பிருக்கும் நிலையில், ஆதார் அட்டை வாக்காளர் பட்டியலோடு இணைக்கப்பட்டால், அது தேர்தலின்போது தவறாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்பிருப்பதாக எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளன.
பாலின நடுநிலையை ஏற்படுத்தும் விதமாக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951இல் மனைவி என்ற வார்த்தைக்குப் பதில் வாழ்க்கை துணை என்ற வார்த்தையைப் பயன்படுத்தவும் தேர்தல் சட்டங்கள் (திருத்த) மசோதா வழிவகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.