இந்தியாவில் தற்போது கேரளாவில்தான், அதிக கரோனா பரவல் இருந்து வருகிறது. நேற்று மட்டும் கேரளாவில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்தநிலையில் நேற்று, கரோனவை கட்டுப்படுத்துவது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன், சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் ஆகியோரோடு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தை தொடர்ந்து, கேரளாவிற்கு கரோனவை எதிர்கொள்ள 267.35 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கோவிட் அவசரகால நடவடிக்கை தொகுப்பு-II கீழ், கேரளாவிற்கு 267.35 கோடி ஒதுக்க மதிய அரசு முடிவு செய்துள்ளது. இது மாநிலத்தின் சுகாதார உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு, கரோனாவை சிறப்பாகக் கையாள உதவும். இதனைத்தவிர மருந்துகள் தொகுப்பினை உருவாக்க மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கூடுதலாக ஒரு கோடி வழங்ப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "கேரளாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் டெலிமெடிசின் வசதிகளை வழங்கும் உயர்மையம் உருவாக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்யும். குழந்தைகள் நலனை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனையிலும் 10 கிலோ - லிட்டர் ஆக்சிஜன் சேமிப்பு தொட்டியுடன், குழந்தைகளுக்கான ஐசியு அமைக்கப்படும்" என மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.