இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் தினசரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதேநேரத்தில் நாளை (14.04.2021) மாநில/ யூனியன் பிரதேச ஆளுநர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தவுள்ளார் என மத்திய அரசின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில், மத்திய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்வாருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், தனக்கு கரோனா அறிகுறி எதுவுமில்லை எனவும் கூறியுள்ளார். தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள், கரோனா பாதுகாப்பு விதிகளைக் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ள அவர், அனைவரும் சேர்ந்து இந்தப் பெருந்தொற்றை வெல்வோம் எனக் கூறியுள்ளார்.