‘பாரத் மாதா கி ஜெய்’ என்று சொல்லாத இளம்பெண் ஒருவரை மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி மேடையிலேயே சாடி, அறையை விட்டு வெளியேற சொன்ன சம்பவம் பெரும் அதிர்ச்சியாக்கியுள்ளது.
கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியில் நேரு யுவகேந்திரா மற்றும் கேலோ பாரத் சார்பில், விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர்கள் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “நாட்டில் மக்கள் தொகையில் 35 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்கள் 65 சதவீதம் பேர் உள்ளனர். மோடியின் வாக்குறுதி மக்களின் வாக்குறுதி ஆகும். அதனால் தான் பல்வேறு நலத்திட்டங்களை விரைவாக ஊழல் இன்றி செயல்படுத்த முடிந்தது” என்று பேசினார்.
பேசி முடித்த பின் அவர், “பாரத் மாதா கி ஜெய்” என்று முழக்கமிட்டார். அப்போது அங்கிருந்த பார்வையாளர்கள் சிலர் முழக்கமிடாமல் அமைதியாக இருந்தனர். அப்போது மீனாட்சி லேகி, “சிலர் கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்துள்ளனர், இந்தியா என்னுடைய தாய் மட்டும்தானா? உங்களுடைய தாய் இல்லையா? அனைவரும் சேர்ந்து சொல்லுங்கள். ஏதாவது சந்தேகம் உள்ளதா? முதலில் ஆர்வம் இருக்க வேண்டும்” என்று கூறி மீண்டும் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று முழக்கமிட்டார்.
அப்போது முழக்கமிடாமல் இருந்த பெண்ணை சுட்டிக்காட்டி, “மஞ்சள் உடை அணிந்த பெண் எழுந்து நில்லுங்கள்” என்று கூறி முழக்கமிட சொன்னார். ஆனால், அந்த பெண் எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தார். அதில் கோபமடைந்த மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி, “நாட்டின் மீது பற்று இல்லாதவர்கள், நாட்டை பற்றி பேச சங்கடமாக உணர்பவர்கள், கோஷம் எழுப்ப தயங்குபவர்கள், இந்த நிகழ்வில் இருக்க வேண்டிய தேவை இல்லை. அதனால், நீங்கள் இங்கிருந்து வெளியேறுங்கள்” என்று கூறினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது.