ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்குக் கடந்த 5ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் அம்மாநிலத்தில் நேற்று (08.10.2024) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில், பா.ஜ.க 48 இடங்களிலும், காங்கிரஸ் 37 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. பெரும்பான்மைக்கு தேவையான அதிக இடங்களான 48 இடங்களை பெற்று பா.ஜ.க, மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது. அம்மாநிலத்தில் முதல்வராக இருந்த நயாப் சிங் சைனி, இம்முறையும் ஆட்சி அமைப்பார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி, 37 இடங்களை கைப்பற்றி எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.
ஹரியானா சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தோல்வியடைந்ததையடுத்து, பா.ஜ.கவினர் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில், பா.ஜ.க மூத்த தலைவரும், மத்திய ரயில்வே துறை இணையமைச்சருமான ரவ்னீத் சிங் பிட்டு காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “மற்ற கட்சிகள் எவ்வளவோ முன்னேறிவிட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சி இன்னும் குடும்பத்தை விட்டு வெளியே வர முடியவில்லை. இந்த உலகில் மீண்டும் டைனோசர்கள் கூட வரலாம், ஆனால், காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வராது” என்று கூறினார்.
சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து பா.ஜ.கவுக்கு சேர்ந்த ரவ்னீத் சிங் பிட்டு, மக்களவை தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்தாலும், அவருக்கு மத்திய அமைச்சரவையில், பா.ஜ.க இடம் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.