18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் தேர்தல் கடந்த 26 ஆம் தேதி (26.06.2024) நடைபெற்றது.
இதில் பாஜகவின் ஓம் பிர்லா, காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த 27 ஆம் தேதி (27.06.2024) உரையாற்றினார். இந்நிலையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா எனப் பலரும் உரையாற்றினார்.
அந்த வகையில் மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா பேச்சுகையில், “பாசிச கொள்கையை மத்திய அரசு கடைப்பிடிக்கிறது. சிறுபான்மையினர், பட்டியலினத்தோரை மத்திய அரசு ஒடுக்கப்பார்க்கிறது. மத்திய பாஜக அரசு நினைப்பதை குடியரசுத் தலைவர், சபாநாயகர் மூலமாக சொல்கின்றனர். 8 முறை பரப்புரைக்கு பிரதமர் மோடி வந்தும், திராவிட மண்ணில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர். எமர்ஜென்சியை அமல்படுத்தியதற்காக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பலமுறை மன்னிப்பு கேட்டுள்ளார். ஒவ்வொருவரும் அவரவர் செய்துகொண்டிருக்கும் வேலையையே செய்ய வேண்டும் எனப் பாஜக நினைக்கிறது. பாஜக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சர்வாதிகாரம் கொண்டவை. பாசிச கொள்கை கொண்ட பாஜக எமர்ஜென்சி பற்றி பேச அருகதை இல்லை” எனப் பேசினார்.