![central government has issued code conduct for online gaming](http://image.nakkheeran.in/cdn/farfuture/_a8K5DmdigK1jsz293l5rC-7KiaItI8Wb5DsX26mrYg/1672711499/sites/default/files/inline-images/995_222.jpg)
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தினால் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், "ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தின் இணைய முகவரியை விளையாடுபவர்கள் சரிபார்க்கும் வகையில் அமைத்தல் அவசியம். பதிவு செய்யப்பட உறுப்பினர்களாக உள்ள நிறுவனங்கள் ஆன்லைன் விளையாட்டுகளை பதிவு செய்யலாம். ஆன்லைன் விளையாட்டுத் தளங்கள் இந்தியாவின் சட்டங்கள் மற்றும் விதிகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும்.
ஆன்லைன் விளையாட்டில் பங்கேற்போர் இந்திய சட்ட விதிகளை மீறி ஆன்லைன் விளையாட்டுகளை ஹோஸ்ட் செய்யவோ வீடியோக்களை வெளியிடவோ மற்றவர்களுக்கு பகிரவோ கூடாது என்பதை அந்தந்த இடைத்தரகர்கள் கண்காணிக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளிலும் பதிவு முத்திரையை நிறுவனங்கள் காண்பிக்க வேண்டும். வைப்புத்தொகையைத் திரும்பப் பெறக்கூடிய வசதியை ஏற்படுத்தியிருக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.