இந்தியாவில் கரோனாவின் மூன்றாவது அலை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாநில அரசுகளும் கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற்று வருகின்றனர். அந்த வகையில், மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம், சர்வதேச பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கரோனா தடுப்பூசியை முழுமையாக, அதாவது இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட சர்வதேச பயணிகள் இனி ஏழு நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை. அதேபோல், விமான நிலையங்களில் சர்வதேச பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனையும் கட்டாயமில்லை. எனினும், இந்தியாவுக்கு வந்தவுடன் தங்களின் உடல்நிலையைப் பயணிகள் சுயமாகக் கண்காணிக்க வேண்டும்.
சர்வதேச பயணிகள் தங்களின் 14 நாட்கள் பயண விவரங்களை ஏர் சுவிதா இணையதள படிவத்தில் குறிப்பிட வேண்டும். இந்தியாவிற்கு புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை 'நெகட்டிவ்' சான்றிதழைக் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த புதிய நடைமுறை வரும் பிப்ரவரி 14- ஆம் தேதி அன்று முதல் அமலுக்கு வரும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் கட்டுப்பாடு தளர்வுகளால் இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை வரும் நாட்களின் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.