28 மாநிலங்களையும், 8 யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கிய கொண்ட நாடு இந்தியா. இதில், 8 யூனியன் பிரதேசங்களின் ஒரு பகுதியாக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் உள்ளது. இந்த நிலையில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேயரின் பெயரை மாற்றப்படவுள்ளதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பிரதமரின் பார்வையால் ஈர்க்கப்பட்டு, காலனித்துவ முத்திரைகளில் இருந்து தேசத்தை விடுவிக்க, இன்று போர்ட் பிளேயரின் பெயரை ‘ஸ்ரீ விஜய புரம்’ என்று மாற்ற முடிவு செய்துள்ளோம். முந்தைய பெயர் காலனித்துவ மரபைக் கொண்டிருந்தாலும், ‘ஸ்ரீ விஜய புரம்’ நமது சுதந்திரப் போராட்டத்தில் அடைந்த வெற்றியையும், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தனித்துவமான பங்கையும் குறிக்கிறது.
நமது சுதந்திரப் போராட்டத்திலும், சரித்திரத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இணையற்ற இடம் உண்டு. ஒரு காலத்தில் சோழப் பேரரசின் கடற்படைத் தளமாக விளங்கிய தீவுப் பகுதி, இன்று நமது மூலோபாய மற்றும் வளர்ச்சி அபிலாஷைகளுக்கு முக்கியமான தளமாக விளங்குகிறது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்ஸால் நமது திரங்காவின் முதல் வெளிக்கொணர்வை நடத்திய இடமும், வீர் சாவர்க்கர் மற்றும் பிற சுதந்திரப் போராளிகள் சுதந்திர தேசத்திற்காக போராடிய செல்லுலார் சிறையும் இதுவே” என்று குறிப்பிட்டுள்ளார்.