ரஃபேல் விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்வது அல்லது சி.பி.ஐ. விசாரணை நடத்துவது பற்றிய கேள்விக்கே இடமில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டிலிருந்து ரஃபேல் போர் விமானங்கள் வாங்க இந்திய அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்களால் வஹக்கு தொடரப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் இல்லை என கூறி, கடந்த டிசம்பர் 14-ந் தேதி, அவர்களின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து ஆங்கில பத்திரிகை ஒன்றில் வெளியான ரஃபேல் ஆவணங்களை அடிப்படையக கொண்டு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணையை முடித்த நீதிமன்றம் எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய இரு தரப்புக்கும் அவகாசம் அளித்தது.
தற்போது மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், "ஒப்பந்தத்தின் 3 முக்கிய அம்சங்களான முடிவெடுத்தல், விலை நிர்ணயித்தல், இந்திய பங்குதாரரை தேர்வு செய்தல் ஆகியவற்றில் உச்சநீதிமன்றம் தலையிட முகாந்திரம் எதுவும் இல்லை என ஏற்கனவே உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. அந்த தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்கான நியாயமான காரணம் எதையும் மனுதாரர்கள் கூறவில்லை. ஆகவே, இந்த விவகாரம் குறித்து முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்வது அல்லது சி.பி.ஐ. விசாரணை நடத்துவது பற்றிய கேள்விக்கே இடமில்லை" என தெரிவித்துள்ளது.