நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (23.07.2024) காலை 11 மணிக்கு தாக்கல் செய்து உரை நிகழ்த்தி வருகிறார்.
அதில், “பிரதமரின் தொகுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக வேலைவாய்ப்பு தொடர்பான ஊக்கத்தொகைக்கான மூன்று திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தும். இவை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பதிவுசெய்தல் மற்றும் முதல் முறையாக ஊழியர்களை அங்கீகரிப்பது மற்றும் ஊழியர்கள் மற்றும் முதலாளிகளுக்கு ஆதரவளிப்பதில் கவனம் செலுத்தப்படும்.
அமிர்தசரஸ்-கொல்கத்தா தொழில் வழித்தடத்தில், பீகாரில் உள்ள கயாவில் தொழில்துறை அனுமதியின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கப்படும். இது கிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும். சாலை இணைப்புத் திட்டங்களான பாட்னா - பூர்னியா விரைவுச் சாலை, பக்சர் - பாகல்பூர் நெடுஞ்சாலை, போத்கயா - ராஜ்கிர் - வைசாலி - தர்பங்கா மற்றும் பக்சரில் கங்கை ஆற்றின் மீது கூடுதல் இருவழிப் பாலம் ஆகியவற்றை ரூ 26 ஆயிரம் கோடியில் மேம்படுத்தப்படும். உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்காக ரூ.10 லட்சம் வரையிலான கடனுக்கான நிதியுதவியை அரசு வழங்கும்.
ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம்- ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தில் உள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மாநிலத்தின் மூலதனத் தேவையை உணர்ந்து, பலதரப்பு முகமைகள் மூலம் சிறப்பு நிதி உதவியை எளிதாக்கப்படும். நடப்பு நிதியாண்டில், ரூ.15 ஆயிரம் கோடி கூடுதல் தொகைகளுடன் வரும் ஆண்டுகளில் ஏற்பாடு செய்யப்படும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSME) காலக் கடன்களை எளிதாக்க, கடன் உத்தரவாதத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அத்தகைய நிறுவனங்களின் கடன் அபாயங்களை குறைக்க இந்தத் திட்டம் செயல்படும். ஒரு சுயநிதி உத்தரவாத நிதி ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் ரூ. 100 கோடி வரையிலான காப்பீட்டை வழங்கும், அதே நேரத்தில் கடன் தொகை அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.
பீர்பைண்டியில் புதியதாக 2400 மெகாவாட் மின் நிலையம் அமைப்பது உள்ளிட்ட மின் திட்டங்கள் ரூ.21,400 கோடியில் மேற்கொள்ளப்படும். பீகாரில் புதிய விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்புகள் கட்டப்படும். பலதரப்பு வளர்ச்சி வங்கிகளின் உதவிக்கான பீகார் அரசின் கோரிக்கைகள் விரைவுபடுத்தப்படும். இதற்காக பீகாருக்கு ரூ. 26 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதன் விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் போலவரம் பாசனத் திட்டத்தை விரைவில் முடிக்கவும், நிதியுதவி செய்யவும் மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளது” எனத் தெரிவித்தார்.