நீர்நிலையில் விழுந்த விலை உயர்ந்த செல்போனை கண்டுபிடிப்பதற்காக நீர்நிலையிலிருந்து மொத்த நீரையும் வெளியேற்றிய அரசு ஊழியரின் செயல் சத்தீஸ்கரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலம் கொயாளிபேடா பகுதியில் உணவுப்பொருள் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜேஷ் விஷ்வாஸ். இவர் தனது நண்பர்களுடன் பரல் கோட் என்ற நீர்த்தேக்கப் பகுதிக்கு சென்றுள்ளார். அப்பொழுது அவரது சட்டை பையிலிருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிக்கத்தக்க விலை உயர்ந்த செல்போன் 15 அடி ஆழம் கொண்ட நீர்த்தேக்கத்தில் விழுந்தது. இது தொடர்பாக நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்திய ராஜேஷ், 30 ஹெச்பி திறன் கொண்ட மோட்டாரை கொண்டு மூன்று நாட்களாக பாசன நீரை வெளியேற்றி செல்போனை மீட்டுள்ளார்.
1500 ஏக்கர் விவசாய நிலத்திற்கு பயன்படும் நீரை அசால்டாக வெளியேற்றி செல்போனை மீட்டது குறித்து புகார்கள் எழுந்த நிலையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இதற்கு ராஜேஷ் விஸ்வாஸ் தரப்பில் அந்த செல்போனில் அரசு சம்பந்தப்பட்ட முக்கியத் தகவல்கள் இருந்ததால் நீரை அகற்றி வெளியேற்றியதாக விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும் ராஜேஷை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.