எலியின் வாலில் கல்லைக் கட்டி கழிவுநீர் வாய்க்காலில் மூழ்கடித்துக் கொன்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் விலங்கு நல ஆர்வலர் விகேந்திர சர்மா என்பவர் மனோஜ் குமார் என்ற இளைஞரின் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரில் மனோஜ் குமார் என்பவர் எலியின் வாலில் கல்லைக்கட்டி அதைக் கழிவுநீர் வாய்க்காலில் தூக்கி எறிந்துள்ளதாகக் கூறப்பட்டு இருந்தது.
மேலும், இது குறித்து விகேந்திர சர்மா கூறுகையில், மனோஜ் குமார் எலியின் வாலில் கல்லைக் கட்டி கழிவுநீர் வாய்க்காலில் மூழ்க வைத்து எடுத்துக்கொண்டு இருந்தார். நான் இதனைக் கண்டு எலியைக் கொடுக்குமாறு கேட்ட பொழுது, அதை அந்த கழிவுநீர் வாய்க்காலில் தூக்கியெறிந்தார். நான் உடனே கழிவுநீர் வாய்க்காலில் இறங்கி எலியை வெளியே எடுத்தேன். அப்பொழுது அது உயிருடன் தான் இருந்தது. ஆனால், சிறிது நேரத்தில் இறந்து விட்டது.
இது மட்டுமின்றி, இதுநாள் வரை அப்படித்தான் செய்து கொண்டு இருந்தேன் என்றும், இனிமேலும் அவ்வாறு தான் செய்யப்போகிறேன் என மனோஜ் குமார் கூறினார் என்று, விகேந்திர சர்மா கூறினார்.
இதனைத் தொடர்ந்து உயிரிழந்த எலியுடன் காவல்நிலையத்திற்குச் சென்று விகேந்திர சர்மா புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல்துறை உதவி ஆணையர் அலோக் மிஸ்ரா கூறுகையில், “குற்றவாளி கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார். எலிகள் விலங்குகள் பிரிவின் கீழ் வராததால் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் இதற்குப் பொருந்தாது” எனக் கூறினார்.
எனினும், விகேந்திர சர்மா கோட்வாலி காவல்நிலையத்தில் புகார் அளித்த பின் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்நிலைய வழக்குப் பதிவின் அடிப்படையில் எலியின் பிரேதப் பரிசோதனை இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்தது. இது குறித்தான அறிக்கை 4 முதல் 5 நாட்களில் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.