நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (23.07.2024) காலை 11 மணிக்கு தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார்.அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி இருந்தன.
இத்தகைய சூழலில் தான் மத்திய பட்ஜெட்டில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு எந்த திட்டமும் அறிவிக்காததை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி எம்பி ஜெயா பச்சன், திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி டெரெக் ஓ பிரையன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் இன்று வழக்கம் போல் கூடியது. அப்போது எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டதாக இரு அவைகள் தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். இதனால் இருஅவைகளில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதற்கிடையே பாரபட்சமான பட்ஜெட் தொடர்பாக மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்வதற்கு முன், எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “இந்த பட்ஜெட் நாற்காலியை காப்பாற்ற தயாரிக்கப்பட்டது ஆகும். எனவே அனைத்து இந்தியா கூட்டணி கட்சிகளும் இந்த பட்ஜெட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இதனைக் கண்டித்து போராட்டம் நடத்துவோம். சமநிலை இல்லை என்றால் வளர்ச்சி எப்படி நடக்கும்?” எனக் கேள்வி எழுப்பினார்.
அப்போது நிர்மலா சீதாரமன், “பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் பட்ஜெட்டில் கூற முடியாது. திட்டமிட்டே மத்திய அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர்” எனத் தெரிவித்தார். அதே சமயம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பட்ஜெட்டில் புறக்கணிக்கபட்டுள்ளன எனக் கூறி மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.