Can money be stashed under Congress MP's house? and Testing with modern equipment

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் காங்கிரஸ் கட்சிமாநிலங்களவை எம்.பி தீரஜ் குமார் சாகு. ஒடிசாவில், இவருக்கு தொடர்புடைய மதுபான ஆலை ஒன்றில் வரிஏய்ப்பு நடந்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5 நாட்களாக சோதனை நடத்தி வந்தனர். ஒடிசா மாநிலத்தில் எம்.பி தீரஜ் குமார் சாகுவுக்கு தொடர்புடைய இடங்கள், அலுவலகங்கள் என பல்வேறு இடங்களிலும், அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களிலும் அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த சோதனையில் எம்.பிக்கு சொந்தமான அலுவலகங்களில் 10 பீரோக்களில் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை பறிமுதல் செய்து எண்ணத் தொடங்கினர். இதில் தொடர்ந்து பணம் எண்ணியதால் பணம் எண்ணும் இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனைத் தொடர்ந்து பல்வேறு வங்கிகளில் இருந்து பணம் எண்ணும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டது. மேலும் இந்த பணியில் வருமான வரித்துறையினர், மூன்று வங்கியின் பணியாளர்கள் என மொத்தம் 80 பேர் பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்டது.

விடிய விடிய 4 நாட்களாக எண்ணப்பட்ட மொத்த பணத்தின் மதிப்பு ரூ.350 கோடி என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பல்வேறு பகுதிகளில் தங்கம் மற்றும், ரொக்கங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியிருந்தது. அதன் அடிப்படையில், ஒடிசாவில் 6 இடங்கள், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மற்றும் மேற்கு வங்கத்தில் சில இடங்கள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Advertisment

இந்த சோதனையின்அடுத்தகட்ட நடவடிக்கையாக, ராஞ்சியில் காங்கிரஸ் எம்.பி தீரஜ் குமார் சாகுவின் வீட்டில் பூமிக்கு அடியில் விலை உயர்ந்த பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கக்கூடும் என்று அதிகாரிகள் சந்தேகத்தித்ததாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், அவரது வீட்டில் கிரவுண்ட் ஸ்கேனிங் ரேடார் என்ற புவிசார் கண்காணிப்பு கருவியை நேற்று முன் தினம் (12-12-23) அதிகாரிகள் அங்கு நிறுவி சோதனையில் ஈடுபட்டனர். இந்த கருவி மூலம் பூமிக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பணம், நகை உட்பட விலை உயர்ந்த பொருட்கள் கண்டிக்கப்படும். ஆனால், அதிகாரிகள் ஈடுபட்டு வந்த சோதனையில், எந்தவித பொருட்களும் சிக்கவில்லை என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.