நாடு முழுவதும் தொலைபேசி வாயிலாக கரோனா பரவல் குறித்த ஆய்வு ஒன்றை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில் நாடு முழுவதும் தொலைபேசி வாயிலாக கரோனா பரவல் குறித்த ஆய்வு ஒன்றை மக்களிடம் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 1921 என்று தொலைபேசி எண்ணிலிருந்து நாட்டு மக்கள் அனைவரும் தொடர்பு கொள்ளப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிலிருந்து அதிகாரிகள் தொடர்புகொள்ளும்போது மக்கள் அவர்களின் கேள்விகளுக்குச் சரியான தகவல்களைக் கூற வேண்டுமென அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த அழைப்பு வரும்போது, கரோனா அறிகுறிகள், பரவல் குறித்த சரியான பதிலை மக்கள் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வரும் மத்திய அரசு, தற்போது மக்களிடையே நேரடியாகத் தொலைப்பேசி வாயிலாகப் பேசி தரவுகளைப் பெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கரோனா அறிகுறிகள் இருந்து இந்தத் தொலைப்பேசி அழைப்பின் போது அதனைத் தெரிவித்தால், அவர்களுக்கு உரியப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 1921 என்ற அதிகாரப்பூர்வ எண்ணைத் தவிர மற்ற எண்களிலிருந்து யாராவது அழைத்து கரோனா அறிகுறிகள் குறித்துக் கேட்டால், பதிலளிப்பதைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.