Skip to main content

பாதியில் நிறுத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டம்! போராட்டக் குழுவினரிடம் பேசிய முதல்வர்! 

Published on 04/10/2022 | Edited on 04/10/2022

 

Cabinet meeting stopped halfway! The Chief Minister spoke to the EB Employees

 

யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதுவை மாநிலத்தில் அரசின் மின்துறையை தனியார் மயமாக்கும் பூர்வாங்க நடவடிக்கைகளை கடந்த ஆட்சி காலத்திலேயே மத்திய அரசு தொடங்கியது. இதை கண்டித்து புதுவை மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் இணைந்து தனியார் மய எதிர்ப்பு போராட்டக்குழுவை உருவாக்கி போராட்டம் நடத்த தொடங்கினர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கடந்த அமைச்சரவை கூட்டத்தில் மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து தனியார்மயம் தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.

 

இதையடுத்து பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தத்தை கடந்த பிப்ரவரியில் தொடங்கினர். தொழிற்சங்கத்தினரிடம் கலந்து ஆலோசிக்காமல் எவ்வித முடிவும் எடுக்கமாட்டோம் என்ற முதல்வர் ரங்கசாமியின் வாக்குறுதி ஏற்று வேலை நிறுத்தத்தை திரும்ப பெற்றனர். 

 

இந்நிலையில் மின்துறை தனியார் மயத்துக்கான டெண்டர் கடந்த மாதம் 28ம் தேதி மாலை வெளியிடப்பட்டுள்ளது. அதையடுத்து புதுச்சேரி மின் துறை பொறியாளர்கள், ஊழியர்கள், தொழிலாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளானார்கள். இதனைத் தொடர்ந்து மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பவில்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்தது. மேலும், புதுச்சேரிக்கு இரண்டு கம்பனி துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டனர். 

 

இந்நிலையில், நேற்று முன்தினம் தலைமை பொறியாளர் அலுவலகத்தில் 200க்கும் மேற்பட்ட மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் துணை ராணுவப் படையினரால் கைது செய்யப்பட்டு மறுநாள் காலை விடுவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மேலும் 200க்கும் மேற்பட்ட முன்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இடதுசாரி கட்சியினரும், விசிகவினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களின் போராட்டம் பெரிதான நிலையில் இது தொடர்பாக விவாதிக்க முதல்வர் ரங்கசாமி தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் கூடியது. 

 

இந்தக் கூட்டம் பாதியிலேயே நிறுத்திய முதல்வர் ரங்கசாமி, மின்துறை ஊழியர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து இந்தப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் மின்துறை ஊழியர்கள் சங்கத்தினரும் தெரிவித்துள்ளனர்.  இந்தப் பேச்சு வார்த்தைக்கு பிறகு அமைச்சரவைக் கூட்டம் மீண்டும் கூடியது. அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது. அதேபோல், மின்துறை ஊழியர்களின் போராட்டம் தீபாவளி வரை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக போராட்டக் குழு தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்