அண்மையில் பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு வெடித்தது. இதனால் போராட்டங்களும் வெடித்தது. இந்நிலையில் யார் தடுத்தாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், 'குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்த்து வருகிறார். ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வரும். இதனை யாரும் தடுக்க முடியாது. அந்த சட்டத்தால் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பயன்பெறுவர். அனைவருக்கும் அந்த சட்டம் அதிகாரம் அளிக்கும். அரசியல் வன்முறை, ஓட்டுக்காக சமாதானப்படுத்துதல், ஊழல், சட்டவிரோத ஊடுருவல் போன்றவைக்கு அனுமதி அளித்ததன் மூலம் மேற்கு வங்கத்தை தற்போதைய மாநில அரசு சீரழித்துள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் இரண்டில் மூன்று பங்கு வாக்குகளை பெற்று பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும். வரும் தேர்தலில் மம்தா பானர்ஜிக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்' என தெரிவித்தார்.