நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.
தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சாந்து ஆகியோர் நேற்று முன்தினம் பதவி ஏற்று கொண்டனர். அதேநேரம் நாடு முழுவதும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. தயார் நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் உள்ளன. தொடர்ந்து தேர்தல் தேதியை முடிவெடுப்பதற்கான தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக வெளி மாநிலங்களில் இருந்து ராணுவப் படையினர் தமிழகம் வந்துள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.