Skip to main content

எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு அதிகரிப்பு - பஞ்சாப், மேற்கு வங்கம் எதிர்ப்பு!

Published on 14/10/2021 | Edited on 14/10/2021

 

indian border

 

பஞ்சாப், அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் எல்லை பாதுகாப்பு படைக்கான அதிகார வரம்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதற்கு பஞ்சாப் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்திய எல்லையோர மாநிலங்களான பஞ்சாப், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில், சர்வதேச எல்லையிலிருந்து அம்மாநிலங்களுக்குள் 15 கிலோமீட்டர் வரை சோதனை நடத்தவும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் உள்ளிட்ட சில சட்டங்களின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கவும், பொருட்களைப் பறிமுதல் செய்யவும் எல்லை பாதுகாப்பு படைக்கு (பி.எஸ்.எஃப்) அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.

 

இந்தநிலையில் சர்வதேச எல்லையிலிருந்து மாநிலங்களுக்குள் 15 கிலோமீட்டர் வரை என்ற எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை மத்திய உள்துறை அமைச்சகம் 50 கிலோமீட்டராக உயர்த்தியுள்ளது. இதன்மூலம் பஞ்சாப், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில், சர்வதேச எல்லையிலிருந்து அம்மாநிலங்களுக்குள் 50 கிலோமீட்டர் பகுதி வரை எல்லை பாதுகாப்பு படையால் கைது செய்தல் மற்றும் சோதனையிடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். ‘எல்லைப் பாதுகாப்பு படையின் செயல்திறனை மேம்படுத்தவும்’ மற்றும் ‘கடத்தல் மோசடிகளை ஒடுக்கவும்’ இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

udanpirape

 

ஆனால் இந்த நடவடிக்கைக்குப் பஞ்சாப் மற்றும் மேற்கு வங்க அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, "சர்வதேச எல்லைகளில் 50 கி.மீ. வரம்புக்குள் எல்லைப் பாதுகாப்பு படைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் அரசாங்கத்தின் ஒருதலைப்பட்சமான முடிவை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான நேரடி தாக்குதல் ஆகும். விவேகமற்ற இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெறுமாறு நான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் மேற்கு வங்க அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம், "சட்டம் ஒழுங்கு என்பது மாநிலத்திற்கு உரித்தானது. ஆனால், இதில் மத்திய அரசு மத்திய நிறுவனங்கள் மூலம் தலையிட முயற்சிக்கிறது" என கூறியுள்ளார். பாஜக ஆளும் அசாம் மாநில முதல்வர் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளார். இதனிடையே எல்லை பாதுகாப்பு படை, “அதிகார வரம்பு நீட்டிப்பு, எல்லை தாண்டிய குற்றங்களைத் திறம்படக் கட்டுப்படுத்த உதவும்" என விளக்கமளித்துள்ளது.

 

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்தப் புதிய உத்தரவின்படி, குஜராத்தில் 80 கிலோமீட்டராக இருந்த எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு, 50 கிலோமீட்டராக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மணிப்பூர், மிசோரம், திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களின் மொத்த பகுதியும் எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பிற்குள் வரும் நிலையில், அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காங்கிரசிற்கு ஒரு வாக்குக்கூட கிடைக்காது” - மம்தா பானர்ஜி அதிரடி பேச்சு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Mamata Banerjee speech on Congress won't get a single vote in west bengal

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொண்டு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

இதற்கிடையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது காங்கிரஸ் தரப்பினரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய காங்கிரஸ் கட்சிக்கும் மேலும் அதிருப்தி ஏற்படுத்தும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார்.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், பகவான்கோலா மற்றும் பாராநகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மே 7 மற்றும் ஜூன் 1 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற்றது. வரும் 26ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. 

அதன்படி, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று (24-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், “மேற்கு வங்கத்தில் 26,000 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்களிடமிருந்து அல்ல, எந்த அரசாங்க ஊழியரிடமிருந்தும் பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது. உச்சநீதிமன்றத்தில் இருந்து நீதி கிடைக்கும் என இன்னும் நான் நம்புகிறேன்.

பாஜக உயர் நீதிமன்றத்தை விலைக்கு வாங்கியுள்ளனர். சி.பி.ஐயை விலைக்கு வாங்கியுள்ளனர். என்.ஐ.ஏ.வை வாங்கியுள்ளனர். பி.எஸ்.எப்-ஐ விலைக்கு வாங்கியுள்ளனர்.  தூர்தர்ஷனின் நிறத்தை காவி நிறமாக்கி விட்டார்கள். அதில், பாஜக மற்றும் மோடியைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். அதைப் பார்க்காதீர்கள். புறக்கணிக்க வேண்டும்” என்று கூறினார். 

Next Story

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமி பலியான வழக்கு; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Shocking information that came out on A case where a girl was incident on her birthday

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி மான்வி., கடந்த மார்ச் 24ஆம் தேதி மான்வி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, மான்வியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஆன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அதன்படி, விநியோகிக்கப்பட்ட கேக்கை, மான்வி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மான்விக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி மான்வி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சிறுமி மான்வி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையின் முடிவானது தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிறுமி மான்வி சாப்பிட்ட கேக்கில் அளவுக்கு அதிகமான சாக்கரின் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தப்பட்டிருந்ததால், மான்வி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.